சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.21) மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், "18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளை ஆதரவற்றவர்களாக கருதி மாத உதவி தொகை வழங்க வேண்டும். திருநங்கைகள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பதால் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருநங்கைகளை பணியமர்த்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலன் :மாற்றுத்திறனாளிகள் கடல் நீரில் கால் நனைக்க மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டத்தைப் போல, தமிழ்நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரப் பாதைகள் அமைக்க வேண்டும். அத்துடன், 40 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
பெண்களுக்கு அளிக்கப்பட்டதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி நிதியம் உருவாக்க வேண்டும். மேலும், கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில், பெண்களே அதிக பயனும் விழிப்புணர்வும் பெற்றுள்ளனர். சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவே பெண்களுக்கான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.