தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்மா உணவகத்தில் சத்துணவு வழங்கும் திட்டம்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - சென்னை செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தினமும் சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 3, 2021, 10:52 AM IST

சென்னை: ’சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்குச் சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்யவும், 1962-63ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

பின்னர் 1982ஆம் ஆண்டு இந்த மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தப்பட்டு, தற்போது அதன் மூலம் 43 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு சத்துணவு

கரோனா பரவலைத் தடுக்க 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும், பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் சமைக்கப்படாத உணவுப் பொருள்கள் 15 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.

இச்சூழலில் தினமும் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது தொடர்பான திட்டத்தைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு வழங்குவதில் சிரமங்கள் இருக்கலாம் எனவும், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், சத்துணவுத் திட்டத்தினை கரோனா காலத்திலும் செயல்படுத்த, கிராமப்புறங்களில் பஞ்சாயத்துகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details