தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஊரடங்கின் காரணமாக தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. ஒரு குடும்பத்தை சமாளிக்க ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகை அமைப்புசாரா தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் போய்சேரவில்லை. 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமும், 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. பொங்கல் திருவிழாவின்போது கூட ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பான் 20 விழுக்காடும், அமெரிக்கா 15 விழுக்காடும் நிவாரணமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், இந்தியாவில் ஜிடிபியில் ஒரு விழுக்காடு மட்டுமே நிவாரணமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊரடங்கு நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய வேலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல வாரியங்களின் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து விரிவாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
கரோனா நிவாரண வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - கரோனா நிவாரண வழக்கு
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விரிவாக பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்