சென்னை:தமிழ்நாடு அரசு நேற்று (ஏப். 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
ஏன் உயர்கிறது சொத்து வரி?: ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ரூத் ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அளித்துள்ள அறிக்கையில், சொத்து வரி சீராய்வு செய்வதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்கு முன்னர், சந்தை மதிப்பு குறியீடு (Market Rate), பணவீக்கம் (Inflation), செலவு பணவீக்க குறியீடு (Cost Inflation Rate), மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) போன்ற காரணிகள் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை விலை குறியீடானது (Wholesale Price Index) நாட்டின் பண வீக்கத்தை குறிப்பிடும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. மொத்த விற்பனை விலை குறியீடு உயர்வை பரிசீலிக்கும் போது 1998 முதல் 2022 வரை பணவீக்கம் 297 மடங்காகவும், 2008 முதல் 2022 வரை 1.79 மடங்காகவும் உயர்ந்துள்ளது.
நகராட்சி, பேரூராட்சிகளின் விவரம்: மேற்கண்டவாறு பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில், சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில், சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட, காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
- 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
- 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
- 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.
தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.
சென்னையில் எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு?: சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின் அறிக்கையின்படி, சென்னையின் பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 விழுக்காடும், சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 விழுக்காடு உயர்த்தவும்; மேலும், சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் உள்ள 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 விழுக்காடு, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு, 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 விழுக்காடு உயர்த்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 விழுக்காடு, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதம், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தவும்; சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும், சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம், சொத்து வரியினை உயர்த்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.