தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கேடிஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆகஸ்ட் 5இல் இறுதி விசாரணை - Chennai district news

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு
கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு

By

Published : Jul 16, 2021, 10:50 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு ஆறு கோடி ரூபாய் எனவும், அதேபோல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு இரண்டு வீட்டுமனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்தச் சொத்தின் சந்தை மதிப்பு ஒரு கோடிக்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏழு கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம். சத்தியநாரயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டுமெனவும், நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கு, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்விதப் பலனும் இல்லை என்றும் கூறி, மகேந்திரன் வழக்கைத் தள்ளுபடிசெய்வதாகத் தீர்ப்பளித்துள்ளார்.

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக எம். நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல்செய்ய அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை நேரடி விசாரணையாக நடைபெறும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details