சென்னை:பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி(43). தொழிலதிபரான இவர் அரசு 'பிலிம்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். நடிகர் விமல் தன்னிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் கோபி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மன்னர் வகையறா தயாரிப்புக்கு...: அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, 'மன்னர் வகையறா' திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறும் கேட்டார். மேலும், பட வெளியாவதற்கு முன்னரே லாபத்துடன் கடன் தொகையை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்ததார்.
கடன் பாக்கி: இதனை நம்பி, நடிகர் விமலிடம் 5 கோடி ரூபாய் கொடுத்து, அதற்கான ஒப்பந்தத்தையும் போட்டு கொண்டேன். 'மன்னர் வகையறா' படம் வெளியாகி நல்ல லாபம் கிடைத்த போதிலும், தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார். பல மாதங்கள் கழித்து, கடன் தொகையில் 1.30 கோடி ரூபாயை திருப்பி கொடுத்த நடிகர் விமல், மீதி தொகையை 6 மாதத்திற்குள் தருவதாக தெரிவித்தார்.