சென்னை: ஐ.ஐ.டி.,யில் இந்தோ - பசிபிக் நாடுகள் சார்பாக 3 நாள் விண்வெளி தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இந்தோ - பசிபிக் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று கலந்துரையாடி வருகின்றனர்.
மேலும், இந்தோ - பசிபிக் பிராந்திய விண்வெளி தொழில்முனைவோர் கூட்டமைப்பை உருவாக்கும் வகையில் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,
”உலகளவில் விண்வெளித்துறையில் ஏற்பட்டுள்ள போட்டியை எதிர்கொள்ளவும், வளர்ச்சியடையவும் இந்தோ - பசிபிக் பிராந்திய நாடுகளுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட உள்ளது. விண்வெளித்துறையில் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை 2சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக உயர்த்த தனியார் மற்றும் ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் இணைவது அவசியம்” என கூறினார்
தொடர்ந்து பேசிய அவர், ”விண்வெளித்துறையில் போட்டியை சமாளிக்க, இந்தோ - பசிபிக் நாடுகள் கூட்டாக செயல்பட முடிவு செய்துள்ளதாகவும், வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் தனியாரும் பங்களிப்பைத் தர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தீபாவளி: தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் 1.12 கோடி பறிமுதல்