சென்னை: தனியார் பள்ளிகளை அரசின் அனுமதி இல்லாமல் மூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசின் அனுமதியைப் பெறாமல் பள்ளிகளை மூட முடியாது என்பதால், பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், தனியார் பள்ளிகளை அனுமதியின்றி மூடினால் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கரோனா காரணமாக தனியார் பள்ளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வேலை பார்க்கும் 5 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் பள்ளிகளை நாங்கள் மூடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறும்போது, "அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு பள்ளியையும் மூட முடியாது. மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலான கல்வி, மாணவர் சேர்க்கை உள்ளிட்டப் பணிகள் நடந்து வரக்கூடிய நிலையில், பள்ளிகள் மூடப்படும் என்று தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி அறிவித்திருப்பது சரியல்ல.
இந்த அறிவிப்பை கண்டு பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை. அரசின் அனுமதி இல்லாமல் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொழிற்கல்வி படிப்பு - அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு