தமிழ்நாட்டில், அனைத்து பள்ளிகளிலும் 25ஆம் தேதிவரை ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு அரசு தடை விதித்திருக்கக் கூடிய நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முன்னணி தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கரோனா காரணமாக ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இருந்தபோதும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை ஆன்லைன் வழி வகுப்புகள் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
ஆன்லைன் வகுப்பில் விதிகளை மீறி செயல்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.