சென்னை: தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,' சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2021-22ஆம் கல்வியாண்டில் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள படிப்பு கட்டணத்தொகையில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். சீருடை, பேருந்துக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது.
சமூக நீதியுடன் பணியாற்ற வேண்டும்
11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும். மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் கால தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
பள்ளிகள் கரோனா சூழ்நிலையையும், பெற்றோர்களின் சூழலையும் கருத்தில் கொண்டு சமூக நீதியுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும்
ஆன்லைன் வகுப்புகளின் செயல்பாடுகளை அரசின் வழிகாட்டுதலின்படி, பள்ளி முதல்வர்கள் கண்காணித்து எந்தவித புகார்களுக்கும் இடமின்றி அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும்.
எந்தக் காரணத்திற்காகவும் மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கவோ, கற்பித்தல் செயல்பாடுகளில் பங்கேற்பதை தவிர்க்கவோ கூடாது. பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் இருந்து நாள்தோறும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு புகார்கள் வருகின்றன. அதுபோன்ற புகார்கள் வராத வகையில் பள்ளிகள் செயல்பட வேண்டும்.
அங்கீகாரத்தைப் புதுபித்தல் அவசியம்
"எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையுள்ள அத்தனை மாணவர்களின் விவரங்களும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
கடந்த 2013-14 ஆண்டு முதல் 2020-21 வரையிலான கல்வியாண்டுகளில், கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் (RTE) சேர்க்கப்பட்ட குழந்தைகள் அனைவரின் விவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) இணையதளத்தில் 'ஆர்டிஇ குழந்தைகள்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
அங்கீகாரத்தைப் புதுப்பிக்காத அனைத்து வகை தனியார் பள்ளிகள் உடனடியாக தங்கள் பள்ளியின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் வகையில், உரிய முறையில் கருத்துரு தயார் செய்து துறைசார்ந்த அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு: நாளை கடைசி நாள்!