சென்னை: திருவொற்றியூர் பகுதியிலுள்ள காலடிப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (38). இவர் ‘எவர்ஸ்டோன் மினரல்ஸ்’ (Everstone Minerals) என்ற பெயரில் நிறுவனம் நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் 2019ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது அர்சத் என்பவரை அணுகி தனது நிறுவனத்தில் விலை உயர்ந்த குவார்ட்ஸ் (Quartz) கற்களை தமிழ்நாடு, ஆந்திராவில் விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாகக் கூறியுள்ளார்.
அதற்காக சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான (Purchasing Order) கொள்முதல் ஆணையை தான் பெற்றுள்ளதாகவும், அதற்கான முதலீடு பணம் இல்லாததால், தனது தொழிலில் தாங்கள் முதலீடு செய்தால் லாபத்துடன் முதலீட்டுப் பணத்தையும் ஒரு ஆண்டு காலத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக முகமது அர்சத்திடம் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் முகமது அர்சத் பல தவணைகளாக வங்கிக் கணக்கின் மூலமும், நேரிலும் பன்னீர்செல்வத்துக்கு சுமார் 5.9 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பன்னீர்செல்வம் லாபத் தொகையையும், முதலீட்டுப் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தொடந்து ஏமாற்றிவந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து முகமது அர்சத் சென்னை காவல் ஆணையரின் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் புகார் அளித்தார்.