அகில இந்திய தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஊரடங்கு நேரத்திலும் பல தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுக்கின்றன. இதற்கு காரணம் அரசு வைத்துள்ள மாணவரின் கல்வி உதவித்தொகை நிலுவைதான் என்கின்றனர். மேலும், மாணவரிடம் கட்டணம் பெறக் கூடாது என அரசு கூறியதையும் காரணம் காட்டுகின்றன இந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள். இரண்டு காரணங்களும், துளியும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
கல்வி அறக்கட்டளைகள் என்பது தனது சொந்தப் பணத்தைக் கொண்டு கல்வியை சேவையாக நடத்த வேண்டும் என்பதையே சட்டம் சொல்கிறது. ஆனால், கல்வியை வியாபார படுத்துதலோ, மாணவரின் கல்விக் கட்டணத்தில் மட்டுமே பள்ளி, கல்லூரியை இயக்குவோம் என்று பிடிவாதம் பிடிப்பதோ அபத்தம். அரசானது இன்று அல்லது நாளை நிலுவைத் தொகையினை கொடுக்கத்தான் போகிறது. அவ்வாறு கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் போது எந்த தனியார் கல்லூரியும், அத்தொகையை வெளிப்படையாக செலவு செய்வதோ, கணக்கு காண்பிப்பதோ கிடையாது.