சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது. நேரடியாக சென்னை வரும் அவர், கிண்டியில் உள்ள ஐ.டி.சி. நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர் அங்கிருந்து பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தலைநகராக திகழ்ந்த கடற்கரை நகரமான மாமல்லபுரத்திற்குச் செல்கிறார். அவர் வருகையையொட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உற்சாக வரவேற்பு
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மதியம் 2.10க்கு, தனிவிமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து அவர் கிண்டி சோழா நட்சத்திர விடுதிக்குச் சென்றார். அங்கு சீன அதிபரை வரவேற்கும் பொருட்டு, இந்தியாவில் வாழும் சீன மக்கள் பெரும்பாலானோர் நட்சத்திர விடுதி முன் திரண்டுள்ளனர். அங்கிருந்து அவர் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் செல்லவுள்ளார்.