சென்னை:தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.14) அக்கட்சியின் 18ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'இது இந்துக்கள் நாடு. இந்து மதம் தொடர்பாக அண்மையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய கருத்து ஏற்புடையது அல்ல. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கட்சியில் சிறிது தொய்வு உள்ளபோதும் கட்சி உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக தொடர்ந்து செயல்படும்' எனவும் தெரிவித்துள்ளர்.
லட்சியத்தை நோக்கி பயணிக்கும் தேமுதிக: முன்னதாக, தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் கட்சி கொடியினை ஏற்றி 500 நபர்களுக்கு இலவச தண்ணீர் குடம் மற்றும் புடவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல் நலன் காரணமாக தேமுதிகவில் தொய்வு இருக்கலாம். ஆனால், தொடங்கப்பட்ட லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகிறது,தேமுதிக.
தேமுதிக முப்பெரும் விழா:இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சியின் தொண்டர்களால் தேமுதிகவின் 18ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருவதன் ஒருபகுதியாக தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் கொடுத்து கட்சியின் தொடக்க நாளை தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். விழுப்புரத்தில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 18ஆம் தேதி தாம்பரத்தில் கொண்டாடப்பட உள்ளது.