சென்னை:நாமக்கல் கவிஞர் மாளிகையில் மழைக்காலங்களில் பொதுப்பணித் துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த மாதம் முதல் பருவமழை காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் நீர்வளத்துறை மூலமாக அனைத்து ஏற்பாடுகளும் துரிதமான முறையில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன் தன்மையை அறிந்து, அதனை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் அணையின் தன்மைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்புக் குழு மூலம் பராமரிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நகராட்சிகளிலும் மண்டலம் வாரியாக வடிகால்களின் தன்மை குறித்து ஆராய்ப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நீர்த்தேக்க பகுதிகளில் மணல் மூட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து ஏரிகள் அணைகளில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் ஆணையர் தலைமையில் கூட்டம் அமைத்து நீர்தேக்கங்களை தடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் வடிகால் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ வாட்டர், நகராட்சி நிர்வாகம் மூலம் சென்னையின் முக்கிய இடங்களில் நீர் தேங்கும் இடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் நீர்த் தேங்காமல் இருக்க வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. நீர் செல்லக்கூடிய வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் கட்டடங்கள் இடியாத வகையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் தரமாகவுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு