தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மீளுமா காங்கிரஸ் - ஓர் அலசல் - காமராஜர் காங்கிரஸ்

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இச்சூழலில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த காரசார விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. இவ்வேளையில் காங்கிரஸ் கட்சியின் பலம், தேர்தல் வியூகம், கூட்டணி முடிவுகள் குறித்த விவரங்களை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

discussion on congress status in tamilnadu, congress party status in tamilnadu, congress party in tamilnadu, Tamilnadu congress, rahul gandhi, sonia gandhi, pre election status of Tamilnadu congress, tn congress history, தமிழ்நாடு காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தேர்தல் வியூகம், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை, இந்திரா காங்கிரஸ், indira congress, சோனியா காந்தி, காமராஜர் காங்கிரஸ், kamarajar congress
pre election status of Tamilnadu congress discussed

By

Published : Nov 20, 2020, 10:17 AM IST

Updated : Nov 25, 2020, 7:59 AM IST

காமராஜர், ராஜாஜி என தமிழ்நாட்டில் இரண்டு மாபெரும் தலைவர்களை முதலமைச்சர்களாக வெற்றிகொண்ட காங்கிரஸ் கட்சி, தற்போது கூட்டணியில் இரண்டு இடங்கள்கூட கூடுதலாக வாங்க முடியாத நிலையில் உள்ளது.

அனைத்து மாநிலங்களையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தற்போது பெரும்பான்மையான மாநிலங்களில் பல்வேறு தேர்தல்களில் மூன்றாவது கட்சியாக இடம்பிடித்து வருகின்றது. அண்மையில் நடந்துமுடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலும் இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி அரசியல் வரலாறு...

தேசிய கட்சியான காங்கிரஸ் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி என்ற தோரணையோடு, 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வந்தது. இந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பெரிய சரிவுகளை கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் சந்தித்து, வெற்றியும் பெற்றுள்ளது. மத்தியில் வெற்றி பெறுவதோடு காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஆட்சி செய்துவந்தது.

இந்திரா - நேரு

ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது. தான் ஆட்சி செய்த 3 மாநிலங்களை அக்கட்சி தாரைவார்த்ததோடு, பல்வேறு மாநிலங்களில் அமைப்பு ரீதியாக பலவீனம் அடைந்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ்...

தேசியளவில் காங்கிரஸ் கட்சியின் நிலை இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி காமராஜர் மறைவுக்கு பின்னர் பேசும்படி வெற்றிகளைப் பெறவில்லை. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்திருந்தாலும், தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற இயலாத நிலை நீடித்து வருகின்றது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 8 தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது. திமுக கடந்த முறை ஆட்சிக்கு வர இயலாததற்கு, காங்கிரஸ் கட்சியின் படு தோல்வியும் ஒரு காரணம் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

பெருந்தலைவர் காமராஜர்

இச்சூழலில், தற்போது காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சியில் இல்லாததும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வில் நீடிக்கும் குழப்பமும், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் குழப்பங்களும் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு காலத்தில் கம்பீரமாக ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போது கூட்டணி கட்சிகளை நம்பியே இருக்கும் நிலைக்கு வந்துள்ளது.

பலம் வாய்ந்த தொகுதிகளை ஒதுக்கினால்...

காங்கிரஸ் கட்சி தற்போது இந்த நிலையில் ஏன் உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் எம்.பி ஜெயக்குமார், “காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பலவீனமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. எங்களால் தனியாக வெற்றி பெற முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் வெற்றிகளை தூண்ட முடியும் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தியுடன்

அதேபோல் எங்களுக்குள்ள 12 விழுக்காடு வாக்குகள் தேவையென்றால், அதை சரியாக பயன்படுத்த வேண்டும். காங்கிரஸின் பலம் வாய்ந்த தொகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளது. அதில் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். திமுக தலைவர் அறிவுறுத்தல்படி, வருகின்ற தேர்தலில் செய்லபடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் காங்கிரஸ் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர் கலப்பை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.

நூழையில் கோட்டைவிட்ட காங்கிரஸ்...

இத்தருணத்தில், காங்கிரஸ் கட்சியின் வியூகங்கள் குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் இணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி ராமச்சந்திரன், “தேர்தல் என்றால் வெற்றி, தோல்வி இருப்பது இயல்புதான். 2014 மக்களவை தேர்தலில் நாங்களும் சரி, திமுக-வும் சரி ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. அதை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் குறிப்பிடப்படும்படி தொகுதிகள் பெற்று எங்கள் கூட்டணி நூலிழையில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். மேலும் அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பல்வேறு ஆலோசனை நடத்தி வருகின்றோம். பிரதமர் மோடிக்கு எதிரான அலையோடு தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மேல் தனி ஈர்ப்பு உள்ளது. அந்த புத்துணர்வோடுதான், 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம்” என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என அனைவரும் கட்சிக்காக அடிமட்டத்திலுருந்து பணிகள் செய்து வந்தவர்கள். மக்களை மையப்படுத்தியே எங்கள் அரசியல் இருக்கும். தற்போது பாஜக அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழ் மண்ணில் காலூன்ற நினைக்கின்றது. தற்போது அதை தடுப்பதே எங்கள் ஒரே நோக்கம் தவிர, காங்கிரஸ் கட்சியைப் பெரிதுபடுத்துவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஆவது எல்லாம் பின்னர் தான்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸின் பங்கு மிகக் குறைவு...

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து பேசிய அரசியல் நோக்கரும், வழக்கறிஞருமான இளங்கோவன், “காங்கிரஸ் கட்சி தேசியளவில் வேறு விதமாகவும், தமிழ்நாட்டில் வேறு விதமாகவும் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பாரம்பரியமாகவே சுதந்தர போராட்டம் காலகட்டத்தில்கூட, பிற மாநிலத்தை ஒப்பிடும்போது, காங்கிரஸ் கட்சியின் பங்கு தமிழ்நாட்டில் குறைவாகத்தான் இருந்துள்ளது”

“சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியைவிட, இங்கு நீதி கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலமாக இருந்தன. சுதந்திர போராட்டத்தின் வெற்றியின் தாக்கத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வெற்றிபெற்று காமராஜர் ஆட்சிக்கு வந்தார். ஆனால் காமராஜர் வெற்றியே நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி இருக்கும் வரைதான் நீடித்தது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவில் இந்திரா காந்தி பக்கம் நிற்க காமராஜர் தவறியதை நன்றாக திராவிட காட்சிகள் பயன்படுத்திக்கொண்டன. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் பெரியளவில் தமிழ்நாட்டு அரசியலில் கவனம் செலுத்தவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது காங்கிரஸ் கட்சி இங்கு அமைப்பு ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளது. இந்தியாவிற்கு பல நல்ல திட்டங்களை காங்கிரஸ் கட்சி செய்திருந்தாலும், அதை மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிலையான இடமில்லை.

தலைவர்கள் வளர்ந்தனர்... கட்சி வளரவில்லை

“மூப்பனார், ப.சிதம்பரம் போன்ற தலைவர்கள், தங்களை முன்னிலைப்படுத்திய அளவிற்கு, கட்சியை பலப்படுத்தவில்லை. கிராம சபைகள், காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டங்கள் போன்றவையை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து, மக்களிடம் கொண்டு சென்றாலே, கட்சியின் நிலை மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்”

தமிழ்நாட்டில் மீளுமா காங்கிரஸ் கட்சி

“தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு எதிரான அலையில் உள்ளனரே தவிர, காங்கிரஸுக்கு எதிரான அலையில் இல்லை. பஞ்சாயத்து ராஜ் முதல் சட்டபேரவைத் தொகுதி வரை காங்கிரஸ் வர வேண்டும் என்று நினைத்தாலே கட்சி வளரும்” எனக் கூறினார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீட்டுருவாக்கம் செய்த மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே. வாசனிடம் இதைகுறித்து கேட்டபோது, எனக்கு இதில் கருத்து கூறுவதற்குஎதுவும் இல்லை, அந்த கட்சியிலேயே பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என நழுவினார்.

Last Updated : Nov 25, 2020, 7:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details