ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (20). இவர் பால் வியாபாரம் செய்துவருகிறார். அவரும் அவரது நண்பர் சூரியகுமார் இருவரும் நேற்று (மே14) நள்ளிரவு ஒரு மணி அளவில் மாடு வாங்க எடப்பாளையம் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது சரஸ்வதி நகர் 11ஆவது தெருவில் நாய்கள் ஒரு பையை கடித்து கொண்டிருந்ததையும், அருகில் பணம் சிதறிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த இருவரும் நாய்களிடமிருந்து அந்தப் பணப்பையை மீட்டு, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியிலிருந்த திருமுல்லைவாயில் காவலர்கள் அவர்களிடம் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டு அதை தொகையிட்டு பார்த்ததில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று பணம் எப்படி கிடைத்தது என விசாரணை மேற்கொண்டுவிட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மறுநாள் திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 11ஆவது தெருவை சேர்ந்த சசிகுமார் என்பவர் திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தானும் நண்பர் ராமச்சந்திரன் என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் கிடைத்த பணத்தை ராமச்சந்திரனிடமிருந்து பெற்று தனது XL வாகனத்தின் டேங்க் கவரில் ஒரு லட்சம் பணத்தை வைத்து வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு மறதியாக வீட்டிற்கு சென்று உறங்கி விட்டதாகவும், காலை பணத்தை தேடியபோது பணம் காணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் இளைஞர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்த பணம் சசிகுமாருக்கு சொந்தமானது என்று உறுதிப்படுத்தி, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சசிகுமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பணம் ஒப்படைத்த தனசேகர், சூரியகுமார் ஆகிய இருவரையும் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க:கண்முன்னே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர்... செய்வதறியாது தவிக்கும் மீட்புப்பணியினர்...