சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, செப்டம்பர் 3ஆம் தேதி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், போலியாகப் பதிவுசெய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் அதிகாரத்தை வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவைப் பேரவையில் கொண்டுவந்தார்.
அப்போது மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இது குறித்து ஆணை வெளியிட்டுள்ளது. அதில், "சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பத்திரங்கள், பொய்யான பத்திரம், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைப் பதிவுசெய்ய பதிவு அலுவலர் மறுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம்
பதிவுச்சட்ட விதிகள் 22ஏ, பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாகப் பத்திரப்பதிவு நடந்துள்ளதாகப் பதிவாளர் கருதினால், அவர் தானாக முன்வந்து ஆவணத்தின் பதிவை ஏன் ரத்துசெய்யக் கூடாது என அறிவிப்பு வழங்க வேண்டும்.
பத்திரப்பதிவை எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்துத் தரப்பினருக்கும், தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்துசெய்யப்பட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அறிவிப்பு வழங்க வேண்டும்.
அதற்கான பதில்கள் பெறப்பட்டால் அதைக் கருத்தில்கொண்டு, முறைகேடு நடந்திருக்கும்பட்சத்தில், ஆவணப் பதிவை பதிவாளர் ரத்துசெய்யலாம். பதிவுத் துறைத் தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் இத்தகைய உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்ட தேதியிலிருந்து 30 நாள்களுக்குள் பதிவுத் துறைத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
முறைகேடான பதிவுகளுக்கு மூன்றாண்டு சிறை
பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்தியோ, திருத்தம்செய்தோ, ரத்துசெய்தோ பதிவுத் துறைத் தலைவர் உத்தரவிடலாம். அதிலும் அதிருப்தி இருந்தால், பதிவுத் துறைத் தலைவர் உத்தரவிட்ட தேதியிலிருந்து 30 நாள்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
முறைகேடான பதிவுகளைச் செய்த பதிவு அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
அதேநேரத்தில், சரி என்று நம்பி செய்யப்பட்ட பதிவுகள், நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட பதிவுகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது. ஒருவேளை இந்தக் குற்றத்தை ஒரு நிறுவனம் மேற்கொண்டிருந்தால், அதன் பொறுப்பில் இருந்த நபருக்குத் தண்டனை வழங்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்