சென்னை: ஈரோட்டைச் சேர்ந்தவர் ஏ. பழனிசாமி. இவர் மீது பதிவுசெய்யப்பட்ட வழிப்பறி, கொலை ஆகிய வழக்குகளில் 2007ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர் சேலம் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்துவந்தார்.
எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி விடுதலை
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்க, 2018 பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அரசாணையும் வெளியிட்டது.
ஆனால், அரசு அறிவிப்பின்படி தனது கணவர் விடுதலை செய்யப்படாததால், அவரை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமியின் மனைவி வழக்குத் தொடர்ந்தார்.
விடுதலையை எதிர்த்து மனு
அதனை விசாரித்த தனி நீதிபதி, கடந்தாண்டு மே மாதம் பழனிசாமியை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் உள் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.என். மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா அரசுத் தரப்பில் முன்னிலையாகி வாதிட்டார்.
உத்தரவை ரத்து செய்க
அப்போது அவர் பேசுகையில், “10 ஆண்டுகள் தண்டனை காலத்தைப் பூர்த்திசெய்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசின் அரசாணை பொருந்தும். தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஒன்பது ஆண்டுகள் 24 நாள்கள் மட்டுமே மனுதாரர் தண்டனை அனுபவித்துள்ளார். அவரை விடுதலை செய்ய 349 நாள்கள் குறைவாக இருக்கின்றன.
அதன் காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவில்லை. தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு, சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த காலத்தையும், மனுதாரர் தவறாகச் சேர்த்து விடுதலை செய்ய கோரிக்கைவிடுக்கிறார். அதனால் பழனிசாமியை விடுதலை செய்யும் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.
இதனையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:'லீக்'காகியதா 50 லட்சம் தமிழர்களின் ஆதார் விவரங்கள்?