கரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில், கல்வி நிறுவனங்களைத் திறப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசித்து, மாநில அரசு முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, 9 லட்சத்து 79 ஆயிரம் பத்தாம் வகுப்பு மாணவர்களும், 8 லட்சத்து 41 ஆயிரம் பதினோராம் வகுப்பு மாணவர்களும், 36 ஆயிரத்து 89 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
இந்தத் தேர்வுப் பணியில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 22 லட்சத்து 43 ஆயிரம் பேரும் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தனை பேரின் உடல் நலம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.