தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அதிகாரிகளை அழைத்துச் செல்லவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கெண்டு செல்லவும் என தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும், வாடகை வாகன ஓட்டுநர்களும், பால், குடிநீர், காய்கறிகள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களும் வாக்களிக்க முடியவில்லை.
நூறு சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு செயல்படும் தேர்தல் ஆணையம், வாக்களிக்க இயலாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களும் வாக்களிக்கச் செய்வதற்கு எந்த நடைமுறையும் இல்லை. வாகன ஓட்டுநர்களும் இந்திய குடிமக்கள் என்ற அடிப்படையில் வாக்களிக்க தகுதி இருந்தும், பணி காரணமாக 8 லட்சம் ஓட்டுநர்களால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, எங்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்காததால், வாடகை வாகன ஓட்டுநர்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தபால் வாக்கு வசதியை ஏற்படுத்தித் தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.