சென்னை:உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டனர்.
பின்னர் பேசிய மா. சுப்பிரமணியன், "நம் உடலில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் கணையநீர் அளவு குறைந்தாலோ, கணையநீர் செயல்பாட்டில் குறைபாடு ஏற்பட்டாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் நிலைக்கு நீரிழிவு நோய் என்று பெயர்.
சர்க்கரை நோய் உலக அளவில் 10 முதல் 12 விழுக்காட்டினரைப் பாதித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 7.7 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8 முதல் 10 விழுக்காடு வரை மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நீரிழிவு நோய்க்கு பட்டயப்படிப்பு மட்டுமே இருந்துவருகிறது. நீரிழிவு நோய்க்குப் பட்டப்படிப்பு பயில்வதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி, ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று விரைவிலேயே நீரிழிவு நோய்க்குப் பட்டப்படிப்பு பயில்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்க்கென்று தனித்துறை சென்னையிலுள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு உயர்நிலைத் துறையாக உயர்த்தப்பட்டது.