தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிசம்பரில் மீண்டும் தொடங்குகிறது மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்! - மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம்

சென்னை: மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கான கட்டுமானப் பணி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

road
road

By

Published : Jan 8, 2021, 7:21 PM IST

சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் அதிகளவில் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், இடையூறின்றி சரக்கு வாகனங்கள் துறைமுகத்தை அடையும் பொருட்டும், கடந்த திமுக ஆட்சியில், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, திட்டத்திற்கு ரூ.1,800 கோடி ஒதுக்கியது.

அதன்படி, துறைமுகத்தின் 10 ஆம் எண் நுழைவாயில் தொடங்கி கோயம்பேடு வரை கூவத்தின் கரையோரமும், பின் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட தூண்களின் மேல் சுமார் 20 கிமீ தொலைவிற்கு பறக்கும் விரைவு சாலையாகவும் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால், இதற்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. முக்கியமாக சுற்றுச்சூழல் சான்றிதழ் வாங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், 50 க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டன.

2012 ஆம் ஆண்டு திடீரென இத்திட்டத்தை நிறுத்தியது அப்போதைய அதிமுக அரசு

மிகவும் மும்முரமாக பணிகள் நடந்து வந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு திடீரென சுற்றுச்சூழலை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்தியது அப்போதைய அதிமுக அரசு. பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட மிகப்பெரிய இத்திட்டம், அதன்பின் கிடப்பில் போடப்பட்டது. தூண்கள் பாதி கட்டியும் கட்டாமல் முடிவுறாத திட்டப்பணிகளால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது. இதனால் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.

இதனிடையே 2018 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் பறக்கும் சாலை குறித்த வரைவு திட்டத்தை கேட்டறிந்தார். இதனால் இத்திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

புதிய வடிவில் பறக்கும் சாலைத்திட்டம்!

இந்நிலையில்தான், கடந்த நவம்பரில் தமிழகம் வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமியுடன் இத்திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில், துறைமுகம்-மதுரவாயல் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்திற்கான புதிய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, முழுமையான திட்ட அறிக்கை தயாரிப்பு பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறங்கினர்.

இது குறித்து சென்னை மண்டல தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் ஜனகுமரன் பேசும்போது, "ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர்தான் இரண்டடுக்கு மேம்பால திட்டதிற்கான வேலைகள் தொடங்கும். அதிகாரிகளிடம் திட்ட அறிக்கையை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கட்டுமானப் பணிகள் 2021 டிசம்பரில் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

டிசம்பரில் மீண்டும் தொடங்குகிறது மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம்!

துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அரசு இனியாவது போக்குவரத்து நெரிசலை புரிந்து கொண்டு, கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சட்டத்தை திரும்பபெற்றால் மட்டுமே வீட்டுக்கு திரும்பி செல்வோம் - விவசாயிகள் உறுதி

ABOUT THE AUTHOR

...view details