மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரான பூச்சி எஸ்.முருகனும் வலியுறுத்தி இருந்தார்.
சின்னக் கலைவாணர் விவேக் சாலை: இதனைத் தொடர்ந்து, சென்னை மேயர் ஆர்.பிரியாவும் ஒப்புதல் அளித்து உரிய அரசாணை வெளியிடுமாறு சென்னை மாநகராட்சி ஆணையரைக் கேட்டுக் கொண்டதன் பின், நடிகர் விவேக்கின் நினைவையும் புகழையும் பறைசாற்றும் விதமாக அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையை உடனடியாக "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என்று பெயர் மாற்றம் செய்து அரசாணையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதன்பொருட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக பூச்சி எஸ்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், 'இதுவரை எனது வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கடந்திருக்கிறேன். ஆனால், இது இதுவரை சந்தித்திடாத ஒன்று. 80களின் இறுதியில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டிருந்த சமயம் அது. விவேக் அவர்கள் அப்போது தான் அறிமுகமானார். ’நான் பேச நினைப்பதெல்லாம்’ படத்தில் எனக்கு மிகச்சிறிய வேடம் தான். ஆனால், விவேக்குடன் வந்த அந்த காட்சி எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
விவேக்கின் குரல் இன்னும் ஒலிக்கிறது: விவேக்குடன் பின்னர் பெரிதாகப் பேசியது இல்லை. ஆனால், கரோனாவுக்கு முந்தைய சில மாதங்களில் பேசத்தொடங்கினார். கரோனா காலகட்டத்தில் ரொம்பவே நெருங்கிப்போனோம். காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை அழைப்பு வந்துவிடும். பேசுவோம். அந்த வானத்தின்கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி அவருடன் பேசலாம். போனை எடுத்ததும் ஒலிக்கும் அந்த ’பூச்சி சார்’ என்ற குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் மறுநாள் காலை அழைப்பதாக சொன்ன விவேக்கிடம் இருந்து அழைப்புக்குப் பதிலாக அவரது மரண செய்திதான் வந்தது. என்னால் இந்த நொடி கூட நம்ப முடியவில்லை. எங்கேயோ அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருக்கிறார்.
விவேக்'ஸ் கிரீன் கலாம்:சென்னை திரும்பியதும் அழைப்பார் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன். கடந்த 16ஆம் தேதி விவேக்கின் உதவியாளர் செல் முருகன் அழைத்து 'நாளை சாரின் முதலாமாண்டு நினைவு நாள். அவரது நினைவாக அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியை விவேக்'ஸ் கிரீன் கலாம் (Vivek's Green Kalam) எனத் தொடங்க இருக்கிறோம்' என்று அழைப்பு விடுத்தார். செல் முருகனிடம் பேசித்தான் விவேக் இல்லாத குறையை தீர்த்துக்கொள்கிறேன்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம். விவேக்குக்கு நெருக்கமான மிகச் சில நண்பர்களே வந்திருந்தனர். விவேக்கின் நண்பர்களும் அவரது சக நடிகர்களும் விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று அங்கே தான் கோரிக்கையை வைத்தனர்.
பேசிக்கொண்டிருக்கும் போதே தகவல் வந்தது. தலைவர் அறிவாலயத்துக்கு வந்திருக்கிறார் என்று அவசரம் அவசரமாக வந்து தலைவர் எதிரில் நின்றேன். கேட்காமலேயே சொன்னேன் நிகழ்ந்ததை. 'ஒரு ஆண்டு ஆகிடுச்சா?' என்றவர் முறையாக ஒரு கடிதம் கொடுக்கச்சொல்லுங்கள் என்றார். அடுத்த சில நாட்களில் செல் முருகனும், விவேக் குடும்பத்தினரும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தனர்.
முதலமைச்சருக்கு நன்றி:சரியாக 15ஆவது நாள் இன்று. விவேக் வசித்த தெருவுக்கே அவர் பெயரை சூட்டி அரசாணையே வெளியாகி விட்டது. அந்த அரசாணையில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் கலைஞனை கௌவுரவிக்க உடனடியாக ஆவண செய்த தமிழினத் தலைவருக்கு நன்றிகள்!
விவேக் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆத்ம நண்பனுக்கு கிடைத்த கௌரவம் என்று மகிழ்வதா.. அவர் இல்லையே.. என்று கலங்குவதா? என்று தெரியவில்லை. எங்கிருந்தோ 'Thank You CM Sir' என்று சொல்வது மட்டும் கேட்டது. நீங்கள் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள் விவேக் சார்…' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விவேக் பெயரில் சாலை.. கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்.. மே.3 பெயர்ப் பலகை திறப்பு..!