விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இவர் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், ''செப்டம்பர் 30ஆம் தேதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.
தற்போது 'அம்மு' என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அன்று 'குமாரி' என்ற மலையாள படமும் வெளியாகிறது. 'கார்கி' படத்தைத் தொடர்ந்து, 'குமாரி' படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.'' என்றார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து, நடித்திருக்கும் 'குமாரி' திரைப்படம் இதுவரை வெளிவராத ஜானர் என்றும், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே எழுந்திருக்கிறது.