சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் ஜூலை 1ஆம் தேதி 2021 அன்று நடத்தப்பட்ட கலை பண்பாட்டுத்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கிராமியக் கலைஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமான கலைவிழா நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து , தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்.04 அன்று 2021-2022ஆம் ஆண்டு துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசால் வெளியிடப்பட்டது .
பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரின் அறிவிப்பு "தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி , தமிழ்நாட்டினைச் சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் , திரளான கலைஞர்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட கலைவிழா , பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும்.
இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி தமிழ்நாட்டினைச் சார்ந்த பாரம்பரியக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழா, ஆண்டு தோறும் சென்னையில் ஆறு இடங்களில் (இணைய வழி மூலமும் ) மூன்று நாள்கள் நடத்துவதற்கு ரூ.91லட்சம் தொடரும் செலவினமாக அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது .
அரசாணையினை செயல்படுத்தும் வகையில் " நம்ம ஊரு திருவிழா " எனும் தலைப்பில் தமிழ்நாட்டின் பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு சென்னையில் ஏழு இடங்களில் வரும் ஜன.14,15,16 ஆகிய மூன்று நாள்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழு வெளி மாநில கிராமியக் கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நம்ம ஊரு திருவிழாவை சீரும் , சிறப்புமாக நடத்வது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தொழில்துறை , தமிழ் ஆட்சிமொழி , தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை வகுக்க வேண்டும்'