சட்டப்பேரவை கூட்டத்தில் நடைப்பெற்ற விவாதத்தில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசுகையில், "அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் 2019-2020ஆம் கல்வியாண்டில் தொடங்கப் படும்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வியை சிறப்பான முறையில் வழங்கும் பொருட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளான ஆய்வகம், நூலகம், பயிற்சிப் பட்டறை, வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்படும். சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, மகளிர் விடுதி கட்டடம் கட்டப்படும்.