தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி விவகாரம்: பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - பொள்ளாச்சி விவகாரம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court

By

Published : Apr 27, 2019, 12:13 PM IST

பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று பல இளம்பெண்களை மிரட்டி ஆபாசமாக படமெடுத்தும், பாலியல் தொந்தரவு கொடுத்தும் வந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் புள்ளிகளின் வாரிசுகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, இதுதொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசு குறிப்பிட்டிருந்தது. அரசின் இந்த அலட்சிய போக்குக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீனாட்சி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுவில், ”பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டது.

பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதால் மற்றவர்கள் யாரும் புகார் கொடுக்க முன் வருவதில்லை. எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டிஜிபி உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details