தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

By

Published : Jan 6, 2021, 11:09 AM IST

Updated : Jan 6, 2021, 1:33 PM IST

Pollachi sex case; Action fired from AIADMK
Pollachi sex case; Action fired from AIADMK

11:02 January 06

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்தும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்றும் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சரான ஓ . பன்னீர்செல்வமும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்பட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து சிலர் பாலியல் துன்புறுத்தல்கள் செய்து காணொலி எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை காவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.

இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை நேற்று (ஜனவரி 5) விசாரணைக்காக சிபிஐ அலுவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் பாபு, ஹெரோன் பால் மற்றும் பொள்ளாச்சி அதிமுக மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் ஆகியோர் ஆவார்கள்.

இந்நிலையில் இந்த மூன்று பேர் மீதும் 376D என்னும் சட்டப்பிரிவின்படி, கூட்டுப்பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. 

இவ்வழக்கினை விசாரித்த பொள்ளாச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி, அவர்கள் மூவரையும் வரும் 20ஆம் தேதி வரை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதனிடையே அருளானந்தத்தை அதிமுகவிலிருந்து நீக்கி, அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தொடர்பாக அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். கழகத்தின் கொள்கைக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் , கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கே.அருளானந்தம், (பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் , மணிமேகலை வீதி, வடுகபாளையம் , பொள்ளாச்சி) இன்று(ஜனவரி.06) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சென்னையில் புத்தாண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத மழை!

Last Updated : Jan 6, 2021, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details