முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயியம்மாள், முதுமை காரணமாக கடந்த 13ஆம் தேதி காலமானார். அவரது மறைவையொட்டி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, நேற்று (அக்டோபர் 20) சென்னை திரும்பினார். இதையடுத்து நேற்று அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் என பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அதைத்தொடர்ந்து, இன்றும் முதலமைச்சரை அவரது இல்லத்தில் பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து வருகின்றனர்.
பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், லதிமுக தலைவரும், திரைப்பட இயக்குநருமான டி. ராஜேந்தர், சட்டப்பேரவை உறுப்பினர் தமீம் அன்சாரி, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் நேரில் வந்து முதலமைச்சரின் தாயார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, முதலமைச்சருக்கும் ஆறுதல் கூறினர்.