தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெகாசஸ் விவகாரம்- மோடி அரசு பதவி விலக வலியுறுத்தும் அரசியல் கட்சிகள் - chennai district news

பெகாசஸ் விவாகரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, மோடி அரசு பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நேற்று(ஜூலை.24) கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

By

Published : Jul 25, 2021, 7:31 AM IST

Updated : Jul 25, 2021, 8:10 AM IST

சென்னை: சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் பாஜக மோடி அரசு உளவு பார்ப்பதாகக் கூறி மே 17 இயக்கம் சார்பில் நேற்று(ஜூலை.24) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தெகலான் பாகவி, மதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைப்பேசிகளை பாஜக அரசு உளவு பார்த்து இருக்கிறது.

இந்த பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷா வோ இதுவரை மறுக்கவில்லை. எனவே, இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளன, ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாக்காமல் மோடி, அமித் ஷாவின் அதிகாரத்தை பாதுகாக்கவே இது போன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

திருமுருகன் காந்தி

பெகாசஸ் மென்பொருள் வாங்கவில்லை என ஒன்றிய அரசு இதுவரை சொல்லவில்லை. பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு அரசியல் சட்டம் வழங்கிய அத்தனை அமைப்புகளையும் ஆயுதமாக்கி வருகிறார்கள். ஸ்டேன் சாமி உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை கண்காணிக்கவே பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டான் சாமியின் மரணத்தை ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையமே கண்டித்துள்ளது. எதிர்கட்சி தலைவர்கள் , பத்திரிகையாளர் உள்ளிட்டவர்களின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “பெகாசஸ் மென்பொருள் மூலம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்யை மிரட்டி தங்களுக்கு தேவையான தீர்ப்புகளை பெற்றுக்கொண்டது ஒன்றிய மோடி அரசு. இது பெகாசஸ் மென்பொருளை திரும்பப் பெறுவது மட்டுமல்ல அது குறித்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல மோடி அரசாங்கத்தை விரட்டுகின்றவரை இந்தப் போராட்டம் தொடரும். அத்தகைய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய விசிக தலைவரும், சிதம்பரவை மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், “மோடி அரசுக்கு எதிராக பற்ற வைத்திருக்கும் தீ பொறி இந்த ஆர்பாட்டம். மோடி பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை நாம் உரத்து முழங்க வேண்டும். நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்காக தனி தனியாக போராடுவதற்கு மாற்றாக மோடியை பிரதமர் பதவியில் இருந்து விலக கோரி போராட வேண்டும்.

பெகாசஸ் செயலி மனித குலத்திற்கே ஆபத்தானது. அறிவு சார்ந்த தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களை மோடி அரசு வேட்டையாடுகிறது. கௌரி லங்கெஷ், கல்புர்கி உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஆயுத பயிற்சி இல்லாமலேயே வெகுமக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுகிறது ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகள்” என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: பெகாசஸ் ஸ்பைவேர்: அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய காங். வலியுறுத்தல்

Last Updated : Jul 25, 2021, 8:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details