தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராம சபைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்! - சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

சென்னை: திமுக தொடங்கி மக்கள் நீதி மய்யம் வரை கிராம சபைக் கூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன. உண்மையிலேயே உணர்வோடுதான் கிராம சபைகளை கட்சிகள் நடத்துகின்றனவா?

sabha
sabha

By

Published : Dec 23, 2020, 9:14 PM IST

’கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூடி தீர்மானம் நிறைவேற்றினால், குறிப்பிட்ட அக்கிராமத்தில் மதுக்கடையை அரசு திறக்கக் கூடாது’ என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கிறது. அந்தளவிற்கு கிராம சபைக்கும், அதன் தீர்மானங்களுக்கும் பொருளும், மதிப்பும் உண்டு. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த கிராம சபையின் தீர்மானம், நீதிமன்ற வழக்காடலின் போது மேற்கோள் காட்டப்பட்டது.

இப்படி ஊராட்சிகளின் முக்கிய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கூட்டப்படும் கிராம சபை கூட்டங்களை, அரசியல் கட்சிகள் தங்களது தேவைகளை முன்வைத்து நடத்தி வருகின்றன. அரசியல் சாசன மதிப்பில்லாத இக்கூட்டங்கள், மக்களிடம் கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை அளிக்கும் கூட்டங்களாக பெரிய ஆடம்பரத்தோடு நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திமுக சார்பில் இன்று முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை 16,000 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதிமுகவை நிராகரிக்கிறோம் என அவர்கள் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலின் போதும், கிராம சபை கூட்டங்களுக்கு திமுக பெரியளவில் முக்கியத்துவம் அளித்தது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் அதையே செய்தது.

மக்கள் நீதி மய்யம் நடத்திய கிராம சபை கூட்டம்...

மக்களை எளிதல் சென்றடைய கிராம சபைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தினாலும், கிராம சபை கூட்டங்கள் எந்த அளவிற்கு தேவையான ஒன்று என்பதையே அவை உணர்த்துகின்றன. இது குறித்து நமது இடிவி பாரத்திடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், ” கிராமத்தின் சட்டசபை என்பதே கிராம சபை. உள்ளூர் திட்டங்களை நிறைவேற்றவும், வரவு, செலவுகளை கணக்கிடவும் உருவாக்கப்பட்டதுதான் கிராம சபை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம்...

ஆனால், தற்போது அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருக்கும் கிராம சபை என்பது வித்தியாசமான ஒன்று. மாதிரி சட்டசபை போல் அரசியல் கட்சிகள் கிராம சபைகளை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் கிராம சபைகள் கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தும், மக்களிடம் பரவலாகாமலேயே இருந்து வந்தது. அரசியல் கட்சிகளால் கிராம சபைகள் இன்று பிரபலம் ஆகின்றன. தேர்தல் பரப்புரைக்காக கூட்டப்படும் இக்கூட்டங்களிலும் அங்கு வரும் அரசியல் தலைவர்களிடம் கிராம மக்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கிறார்கள். ஆனால், அது வாக்குகளாக மாறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் “ என்றார்.

கிராம சபைகளில் வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல் தலைவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தபின் கிராமங்களுக்கான அதிகாரங்களை கொடுக்க வேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது. கட்சிகளின் இந்த கூட்டங்களுக்கு பின் அரசியல் இருந்தாலும், இவ்வாறான கூட்டங்களில் கிராம மக்களிடம் பெறப்படும் கோரிக்கைகள் அனைத்தும், தேர்தல் வாக்குறுதிகளாக வெளிவந்தால் உண்மையிலேயே மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை அது உருவாக்கும்.

கிராம சபைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்!

இதையும் படிங்க: ஆடை அணியாத கடவுள்.... பாலியல் வன்கொடுமைக்கு ஆடை காரணமா? - கமல்ஹாசன் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details