அரசியல்வாதியானஉயர் அலுவலர்கள்
அண்ணாமலை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கோவையில் பொறியியல் படித்த இவர், இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ்-ஆகத் தேர்வான இவர், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்.
இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து, தவறுசெய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எனக் கடுமை காட்டினார். இதனால் பொதுமக்களால் 'கர்நாடக சிங்கம்' என அழைக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு மே மாதம் பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை, அரசியலைத் தூய்மைப்படுத்தும் 'வீ தி லீடர்' (நம்மில் ஒரு தலைவன்) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து அவர், பாஜக போன்ற இயக்கங்கள் நடத்தும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு, தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார் அண்ணாமலை.
சந்தோஷ் பாபு
1995ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஏஸ் அலுவலரான இவர் 1997இல் சிதம்பரம் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். 2006இல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகச் செயல்பட்ட சந்தோஷ் பாபு, 2008இல் ’எல்காட்’ நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2011இல் தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் மையத்தின் தலைமைச் செயல் அலுவலராகவும் பதவி வகித்தவர். மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், இவரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
பணி ஓய்வுபெறுவதற்கு முன், தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்’ அமைப்பின் நிர்வாக இயக்குநராக அவர் பணியாற்றினார். ஓய்வுபெற எட்டு ஆண்டுகள் இருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்த சந்தோஷ் பாபு, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
ஆர். ரங்கராஜன்
2005ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த ஆர். ரங்கராஜன், பதவியை ராஜினாமா செய்து அரசியலில் ஈடுபட்டார். 2018ஆம் ஆண்டு கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். 2019ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் ரங்கராஜன் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
மவுரியா
2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலரான ஏ.ஜி. மவுரியாவுக்குப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.
ஆர். நட்ராஜ்
1975ஆம் ஆண்டு பேட்ச் அலுவலரான ஆர். நட்ராஜ் ஐபிஎஸ், பணி ஓய்வுக்குப் பின் 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர், காவல் துறை இயக்குநர் எனப் பதவி வகித்த அவருக்கு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவான நட்ராஜ் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மலைச்சாமி
சிவகங்கை மாவட்டம் அண்டக்குடி என்ற கிராமத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்த ஐஏஎஸ் அலுவலரான மலைச்சாமி, பணி ஓய்விற்குப் பிறகு அதிமுகவில் இணைந்தார். 1999ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றிபெற்று எம்பி ஆனார். இதனைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2014ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகிய அவர், பாஜகவில் இணைந்தார்.
அலெக்சாண்டர்
1970ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இணைந்த அலெக்சாண்டர், தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஆனால் அலெக்சாண்டருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.
சந்திரலேகா
1947ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் பிறந்த சந்திரலேகா, 1971ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அலுவலர். 1991 முதல் 1992ஆம் ஆண்டு வரை டிட்கோ சேர்மனாக இருந்தபோது, பங்குகளை விற்பனைசெய்வது தொடர்பான விவகாரத்தில், சந்திரலேகா முகத்தில் திராவகம் வீசப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பதவியை ராஜினமா செய்த அவர், அரசியலில் குதித்தார். ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்ட அவர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் தோல்வியைத் தழுவினார்.
மணிசங்கர் ஐயர்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த காருகுடி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட மணிசங்கர் ஐயர், லாகூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய ஆட்சிப்பணியில் 1963ஆம் ஆண்டு இணைந்த அவர், பிரதமரின் இணைச் செயலராகப் பொறுப்பு வகித்தவர். 1989ஆம் ஆண்டு பணியை ராஜினாமா செய்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதனைத்தொடர்ந்து 1991ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1999, 2004ஆம் ஆண்டு தேர்தல்களிலும், அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004 முதல் 2009 வரை மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார்.
சிவகாமி
1957ஆம் ஆண்டு பிறந்த சிவகாமி ஐஏஎஸ் - தூத்துக்குடி, வேலூர் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றினார். தொழிலாளர் துறை கூடுதல் செயலராகவும், சுற்றுலாத் துறை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலராகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. இலக்கிய ஆர்வம் மிக்க அவர், 2009ஆம் ஆண்டுமுதல் முழு நேர அரசியலில் ஈடுபட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த சிவகாமி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். பின்னர் சமூக சமத்துவப் படை என்ற கட்சியைத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பெரம்பலூர் தனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட அவர், அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
ஹரியானா மாநிலம் இசாரில் 1968ஆம் ஆண்டு பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஐஐடி கரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்திய வருவாய்த் துறை பணியில் சேர்ந்து டெல்லியில் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். 2000ஆம் ஆண்டில் தற்காலிக பணி ஓய்வுபெற்று குடிமக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்.
அன்னா ஹாசாரே உள்ளிட்டோருடன் ஊழலுக்கு எதிராகப் போராடிவந்த அவர், 2012ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்தார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் 49 நாள்களில் அவர் பதவி விலக நேர்ந்தது.
பின்னர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. 2020ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார் அரவிந்த் கெஜ்ரிவால். 2006ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
கிரண் பேடி
1949ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த கிரண்பேடி, இந்திய காவல் பணியில் சேர்ந்த முதல் பெண் அலுவலர் ஆவார். 1993ஆம் ஆண்டில் டெல்லி சிறைச்சாலையில் பணியாற்றியபோது, அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அவரின் இந்தப் பணி 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருதுபெற காரணமாக இருந்தது. 2007ஆம் ஆண்டில் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற கிரண்பேடி, 2015ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
அதே ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடி, அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமியுடன் மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
யஸ்வந்த் சின்ஹா
1937ஆம் ஆண்டு பாட்னாவில் பிறந்த யஸ்வந்த் சின்ஹா, 1960ஆம் ஆண்டுமுதல் 1984 வரை இந்திய ஆட்சிப்பணியில் இருந்தார். பின்னர் விருப்ப ஓய்வுபெற்று அரசியலில் இறங்கினார். பிரதமராக இருந்த சந்திரசேகர் அமைச்சரவையில் யஸ்வந்த் சின்ஹா நிதியமைச்சராகப் பதவி வகித்தார்.
பின்னர் 1998 முதல் 2002 வரை வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தார். 2018ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய சின்ஹா, அண்மையில் திருணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரின் மகன் ஜெயந்த் சின்ஹா 16 மற்றும் 17ஆவது மக்களவைத் தேர்தலில் வென்று எம்பியாக உள்ளார்.