சென்னை:முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான கர்மவீரர் காமராஜரின் 48ஆவது நினைவு தினம் இன்று (அக்-2) அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் காமராஜருக்கு புகழாரம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டரில், ‘கல்வியில் சமத்துவத்தையும், அரசியலில் நேர்மையும், பேச்சிலும், தோற்றத்திலும் எளிமையும், வேளாண்மை, தொழிற்துறை என தமிழகத்தின் பல்வேறு துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை வகுத்த மக்களின் பெருந்தலைவரான கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகங்களை போற்றி வணங்குகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ட்விட்டரில், ‘இளம் வயதிலேயே பொதுசேவையில் தன்னை அர்ப்பணித்து, மனித குலத்துக்கும், தாய் நாட்டுக்கும் அரும்பெரும் சேவையாற்றி, பாரத மக்களின் உள்ளங்களில் நிலையான இடத்தைப் பெற்ற கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளான இன்று, அன்னாரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்’ என்று பதிவிட்டார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காமராஜர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வீடியோவை பகிர்ந்து, 'ஏழை - எளியோருக்கும் கல்வியை சாத்தியமாக்கி, பல தலைமுறையினரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றிய பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாள் இன்று.தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றுவோம்’ எனப் பதிவிட்டார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "செயற்கரிய செய்வார் பெரியர்" என்னும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப செயற்கரிய பல செயல்கள் புரிந்து நேர்மை, எளிமையின் உருவமாக வாழ்நாள் முழுவதும் சமூகத் தொண்டிற்காகவே அர்ப்பணித்த கல்வித்தந்தை காமராஜர் ஐயாவின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இன்று ( செப். 2) காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின் காமராஜரின் நினைவு இடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காமராஜருக்கு புகழாரம் சூட்டி நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இது காந்திய மண் என சூளுரைப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு