சென்னைஐஐடியின் 58ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் பூப்பந்து உலக சாம்பியனும் சிந்து கலந்துகாெண்டு சிறப்புரை வழங்கினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரியப் பரியத்தின் படி நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். ஆனால் சமஸ்கிருதம் பாடலுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு பல்வேறுத்தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதை கடுமையாக கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது. 2019ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐஐடி மாற்றக்கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படவேண்டும். தமிழ்நாடு அரசு பேசி அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
அதேபோல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த20ஆம் தேதியன்று நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். முதல் தடவையல்ல இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது; (சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது) முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ- மதிக்கவோ ஐஐடி என்ற உயர் சாதி பார்ப்பன ஆதிக்க வல்லாண்மை தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கது தானா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.