சென்னை:நடிகை மீரா மிதுன் தனது யூ-ட்யூப் பக்கத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
பட்டியலினத்தவர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ அமைந்திருப்பதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
மீரா மிதுனை காவலில் எடுக்க திட்டம்
புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது பட்டியலினத்தோர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மீரா மிதுன் இத்தகைய வீடியோவை வெளியிட உடந்தையாக இருந்த அவரது நண்பர் அபிஷேக் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீரா மிதுன் காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
யூ-ட்யூப் பக்கத்தை முடக்க நடவடிக்கை
தற்போது, பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட மீரா மீதுனின் யூ-ட்யூப் பக்கத்தை முடக்க பரிந்துரை கடிதத்தை யூ-ட்யூப் நிர்வாகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அனுப்பியுள்ளனர்.
அவதூறாகப் பேசிய வீடியோவை மீரா மிதுன் தனது வலைதளப் பக்கத்திலிருந்து நீக்கி இருந்தாலும், பினையில் வெளிவந்து மீண்டும் இது போன்ற வீடியோக்கள் வெளியிட வாய்ப்புள்ளதால், அவரது யூ-ட்யூப் பக்கத்தை முடக்க பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த நண்பர் கைது