சென்னை: ஆந்திரா பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் லாரிகள் மூலமாகச் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாகச் சென்னை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலையடுத்து வடக்கு மண்டல இணை மற்றும் துணை ஆணையாளர் ஆணைக்கிணங்க, திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பக்கமாகச் சென்ற லாரியை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒன்றரை டன் எடையுள்ள 46 செம்மர கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், காவல்துறைக்குச் சந்தேகம் வராமல் இருக்க மேலே தார்ப்பாய் வைத்து அதன் கீழே கட்டைகளை வைத்து மறைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது.
உடனடியாக லாரியை செம்மரக்கட்டைகளுடன் பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.