சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட்டு தல என்ற பெயரில் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, மோதலில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.
இதனைத் தடுப்பதற்காக சென்னை காவல் துறை, தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மீறியும் சில கல்லூரி மாணவர்கள் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது காவல் துறைக்கு பெரும் தலைவலியே.
குறிப்பாக கரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநில கல்லூரியில் சில மாணவர்கள் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தினமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் மீறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்து கல்லூரி வளாகத்திலுள்ள சிலைக்கு மாலையிட்டது தொடர்பாக 200 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டதால் எட்டு மாணவர்களை கைது செய்து எழுதி வாங்கி கொண்டு ஜாமீனில் விடுவித்தனர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இதனையடுத்து நியூ கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்களிடம் காவல் துறையினர் ஆலோசனை நடத்தி, பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பட்டியல் கேட்டு வாங்கியுள்ளனர். மேலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.