சென்னை:மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2-வது நீண்ட கடற்கரை ஆகும். சுமார் 13 கி.மீ நீளம் கொண்ட மெரினா இந்திய மாநகரங்களில் ஒன்று. சென்னையின் கடல் எல்லையை வரைவாகவும் சென்னையின் தவிர்க்க இயலாத அடையாளமாகவும் திகழ்கிறது. உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக விளங்குகிறது.
இங்கு குவியும் மக்களை மகிழ்விப்பதற்காக, ஒரு ரவுண்டுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை என குதிரை சவாரியும் நடக்கிறது. இதில் முக்கியமாக குடும்பத்துடன் மெரினா கடலுக்கு பொழுதுபோக்குக்காகவும், கடலையும் ரசிக்கவும் வருபவர்கள் தங்கள் குழந்தைகள், சிறுவர்களை குதிரையில் சவாரி ஏற்றி மகிழ்கின்றனர்.
மெரினா குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை-அடையாள அட்டை
இது ஒரு பக்கம் இருந்தாலும் மெரினாவில் கூட்டம் கூடும் சமயங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. மேலும் குதிரையில் ஏறும் குழந்தைகள் காணாமல் போவதுமாக பல குற்றங்கள் நடக்கவும் இது ஏதுவாகிறது. இதனால் குதிரை சவாரி தொடர்பாக குதிரையை வைத்து தொழில் செய்யும் நபர்களை வரைமுறைப்படுத்தவும், அவர்களை கண்காணிக்கவும் சென்னை நகர காவல்துறை புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் மேற்பார்வையில் குதிரை ஓட்டிகள் எத்தனை பேர், அவர்களது பெயர் விவரம் அடங்கிய பட்டியலின்படி அவர்களுக்கு தனி அடையாள எண்ணுடன் கூடிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவர்களுக்கு தனி சீருடையும் வழங்கி காவல்துறை வழங்கியுள்ளது. குதிரை ஓட்டிகள் தொடர்பாக, தனி பதிவேட்டையும் காவல்துறையினர் தயார் செய்து அதனை பராமரித்து வருகின்றனர்.
அவ்வாறு மேலும், குதிரை ஓட்டிகளுக்கு சாம்பல் நிற பேண்ட், மஞ்சள் நிற டீ ஷர்ட், மஞ்சள் நிற தொப்பியும் சீருடையாக வழங்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மெரினா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குதிரை சவாரி செய்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர். மயிலாப்பூர் உதவி ஆணையர் சீனிவாசன் மெரினாவுக்கு வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று குதிரை ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேருந்தில் மோடி படம் எங்கே?: பாஜகவினர் கலெக்டருடன் வாக்குவாதம்!