சென்னை: அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தின் கிளையில், நேற்று (ஆக. 13) இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.
அரும்பாக்கத்தில் இயங்கி வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொரட்டூர் பிரதான சாலை TNHP குடியிருப்பைச்சேர்ந்த முக்கிய குற்றவாளி என கருதப்படும் முருகனை(36) பிடிக்க, அவரது சகோதரி கோகிலாவைப் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் முகப்பேரில் தங்கியிருந்த மகேஷ் என்பவரையும் முருகனின் நண்பரான சரத்தின் தாயாரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரும்பாக்கம் காவல்நிலையத்திற்குட்பட்ட ரச கார்டன் சாலையின் எஸ்பிஐ காலனியில் உள்ள ஃபெடரல் வங்கியின் கிளை நிறுவனமான ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தில் காவலாளி சரவணன் என்பவருக்கு முருகன் மற்றும் அவரது கூட்டாளி டேவிட்சன்(46) ஆகியோர் குடிப்பதற்கு மயக்கமருந்து கலந்த மாஸா கூல்டிரிங்க்ஸ் வாங்கித் தந்துள்ளனர். பின்னர், வங்கிக்குள் மேலாளர் சுரேஷ் (30), வாடிக்கையாளர் சேவை நிர்வாகி விஜயலட்சுமி (36) ஆகியோர் இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்கள் இருவரையும் கத்தி முனையில் கழிவறைக்குள் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முருகனும் அவரது கூட்டாளி டேவிட்சன் என்பவரும் சேர்ந்து வங்கியின் லாக்கரை திறந்து அதிலிருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடித்துச்சென்றனர். அத்துடன் அடைத்து வைத்திருந்த வங்கி அலுவலர்கள் இருவரையும் மீண்டும் வெளியே அழைத்து வந்து, நகைகள் இருந்த லாக்கர் அறைக்குள் வைத்து மீண்டும் பூட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக, வங்கி நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வெளியே வந்த முருகனும் டேவிட்சனும் தங்களின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதாகத் தெரிய வருகிறது.