தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் துறையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!

காவல் துறையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

HRC
HRC

By

Published : Jun 2, 2022, 5:23 PM IST

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரில், கோயம்பேட்டில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த தன்னை கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, போலீசார் அழைத்துச் சென்று, பசுபதி என்பவர் காணாமல் போனது குறித்து விசாரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர் குறித்து தனக்கு ஏதும் தெரியாது எனக் கூறியும், அதைக் கேட்காமல் தன்னை தனியார் இடத்தில் அடைத்து வைத்து, நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், பொய் வழக்கில் தன்னை சிறையில் அடைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கு காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அடித்து துன்புறுத்தியதாக கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும், உதயகுமார் தன் மீதான குற்றச்சாட்டை திசை திருப்பவே இவ்வாறு அவதூறு பரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனித உரிமை மீறல் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட உதயகுமாருக்கு 5 லட்சத்து 75ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை 8 வார காலத்திற்குள் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை சம்பந்தப்பட்ட காவலர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நேதாஜியின் ஐஎன்ஏ பிரிவில் இருந்த அஞ்சலை பொன்னுசாமி மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details