சென்னை: திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று ஊழியரை கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரனையை மேற்கொள்ளத் தொடங்கினர்.
இந்த விசாரணையில் டிக்கெட் அளிக்கும் ஊழியரான டீகாராம் மீனா, இரவுப் பணியில் இருந்த போது நள்ளிரவில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென கவுண்டருக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெரிவித்தார். பின்னர் கை, காலை கட்டிப்போட்டு கவுண்டரில் இருந்த 1.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக வாக்குமூலம் அளித்திருந்தார். ரயில் நிலையம் சுற்றிலும் சிசிடிவிக்கள் இல்லாததால் ரயில்வே காவல் துறையினருக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.
நாடகமாடியது அம்பலம்
இதனையடுத்து, எஸ்.பி அதிவீர பாண்டியன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக, ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண் ஒருவர் அதிகாலை நான்கு மணியளவில் ரயில் நிலையத்திற்குச் செல்வது போல் பதிவாகி இருந்தது.
இந்தப் பெண் குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்திய போது டீகாராம் மீனாவின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த காவல் துறையினர் டீகா ராமிடம் மேலும் தீவிர விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.