சென்னை: ஆதம்பாக்கம் கக்கன் நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்தவர் தகலாராம் சவுத்ரி (43). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் தன் பெயர் உமா என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர், பழைய நகைகளுக்கு் பதிலாக புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக கூறி தனது நகைகளைக் கொடுத்துவிட்டு, 7 சவரனுக்கு புதிய நகைகளை வாங்கிச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது நகைகள் அனைத்தும் போலியானது என சவுத்ரிக்குத் தெரியவந்தது. உடனே இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
சிசிடிவியில் சிக்கிய பெண்
இதேபோல், ஆதம்பாக்கம் கருணீக்கர் தெருவில் நகைக்கடை நடத்தி வரும் ஜதேந்தர் குமார் (51) என்பவரின் கடைக்கு வந்த பெண் ஒருவர் நகைகளைப் பார்த்துவிட்டு, எதையும் வாங்காமல் சென்றுவிட்டார். பின்னர்தான் கடையில் இருந்த ஒன்றரை சவரன் கம்மல் திருடு போனது கடைக்காரர்களுக்கு தெரியவந்தது.
இது குறித்தும் கடைக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருட்டு நடந்த இரண்டு கடைகளில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், போலி நகை கொடுத்து தங்க நகை வாங்கிச் சென்றதும், நகையை திருடிச் சென்றதும் ஒரே நபர் என்பது தெரியவந்தது.