சென்னையை சேர்ந்த குமரவடிவேல் என்பவர் குறைந்த விலையில் கார் வாங்கி தருவதாக பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில் கே.கே நகர் பாரதிதாசன் காலனியில் பாரத் பெங்களூரு புட்பால் என்ற பெயரில் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் டொயோடா நிறுவனத்தில் 30 சதவிகிதம் தள்ளுபடியில் தனது கிளப்பிற்கு கார்கள் விற்பனை செய்வதாக தெரிவித்தார். அந்தக் கார்களை அதே விலைக்கு தனக்கு தருவதாக நவீன் தெரிவித்தார்.
இதனை நம்பி குமரவடிவேல் காருக்கான பணத்தை நவீன் குமார் கொடுத்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்த நண்பர்கள் பலர் 19 கார்களுக்குண்டான ரூ.2 கோடியே 15 லட்சத்து 88 ஆயிரத்து 656-ஐ நவீன்குமாரின் கிளப் வங்கிகணக்கிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் நீண்ட மாதங்களாக காரை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் நவீன் ஏமாற்றி வந்ததால் புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குறிப்பாக அவரது செல்போன் எண்ணை வைத்து ஆய்வு நடத்தியதில் நவீன் பெங்களூருவில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆவணங்கள் நம்பிக்கை மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ஜான் பீட்டர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து நவீனை கைது செய்தனர்.