ராணிப்பேட்டை:வாலாஜா அருகே லாலாபேட்டையைச் சேர்ந்தவர் பி.எட் பட்டதாரியான மீரா. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அரசு பணிக்காக முயன்றுவந்த மீராவிற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
தனது நண்பர் சுந்தர் குமார் என்பவருக்கு பள்ளிக்கல்வித்துறையில் அலுவலர்கள் பலரையும் தெரியும் எனவும், அதனால் ஆசிரியர் வேலை வாங்கித் தரலாம் என கூறியதை நம்பி சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சுந்தர் குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரை சந்தித்து பல்வேறு தவணைகளாக சுமார் 10 லட்சம் ரூபாயை மீரா கொடுத்துள்ளார்.
சுந்தர் குமாரும், அவரது மனைவி பிரியாவும் சேர்ந்து இதே போன்று பலருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தந்திருப்பதாக மீராவை நம்ப வைத்து பணத்தை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு பணத்தை வாங்கிக் கொண்டு அதற்குபிறகு சொன்னபடி வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு சிஎம் பிடி காவல் நிலையத்தில் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட மீரா புகார் அளித்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வைத்து தான் பணத்தை கொடுத்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கொடுத்த புகாரில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சி.எம்.பி.டி காவல்துறையினர் சுந்தர் குமார், அவரது மனைவி பிரியா இருவரையும் நேற்று(ஏப்ரல்.01) கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரனை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பெட்சிட் வியாபாரம் செய்வது போல் கஞ்சா கடத்தல் - 4 பேர் கைது