தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓட்டுநருக்குத் துன்புறுத்தல்: காவலர்களுக்கு ரூ. 4.5 லட்சம் அபராதம் - பெரம்பலூர் காவலர்களுக்கு 4.5 லட்சம் அபராதம்

கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தி, பொய்யான வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஓட்டுநரைத் துன்புறுத்திய பெரம்பலூர் காவல் துறையினருக்கு நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Jan 12, 2022, 7:37 PM IST

சென்னை:இது குறித்து பெரம்பலூரைச் சேர்ந்த சவுந்தரி என்பவர் அனுப்பிய புகார் மனுவில், "2012ஆம் ஆண்டு எனது மகன் சாந்தகுமாரை கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பெரம்பலூர் காவல் துறையினர், குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தி துன்புறுத்தினர்.

குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் வழிப்பறி வழக்கில் கைதுசெய்து சிறையிலடைத்ததுடன், என்னையும், எனது மகளையும் ஆபாசமாகத் திட்டியதுடன் பாலியல் வழக்கில் கைதுசெய்து விடுவதாக காவல் துறையினர் மிரட்டினர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே ஆணையத்தில் அளித்த புகாரைத் திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுத்ததாகக் கூறி, பெரம்பலூர் காவல் ஆய்வாளர் மயில்சாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் அங்குசாமி, உதவி ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட எட்டு காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மற்றொரு புகாரையும் அனுப்பியிருந்தார்.

இந்த இரண்டு புகார்களையும் விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், பெரம்பலூர் காவல் துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட புகார்தாரர் சவுந்தரிக்கு நான்கு லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்தத் தொகையில், ஒரு லட்சம் ரூபாயை பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் மயில்சாமியிடமிருந்தும், மீதமுள்ள ஏழு பேரிடமிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வீதமும் வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details