சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டு பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக் ஜெயராமன் உட்பட 250-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும்நிலையில், இந்த வழக்கின் முக்கிய ஆவணம் ஒன்று தற்பொழுது போலீசாரிடம் சிக்கி உள்ளதால் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமார் என்பவரிடம் கோவையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கோவை சரக டிஐஜி முத்துசாமி தலைமையிலான போலீசார் நேற்று (ஜூலை8) சென்னைக்கு விரைந்தனர்.
சென்னை சிஐடி நகரில் டிஐஜி முத்துசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை சென்னை சிஐடி நகரில் ஷைலி அடுக்குமாடி குடியிருப்பில் டிஐஜி முத்துசாமி, கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்த போது இங்கேயும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையில் கொடநாடு பங்களா தொடர்புடைய முக்கிய ஆவணம் ஒன்றை வருமானவரித்துறை கைப்பற்றியது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் கொடநாடு பங்களாவில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் இருவருக்கும் தொடர்புடைய இடங்களிலும் 2017ஆம் ஆண்டிலேயே வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
கொடநாடு பங்களா கட்டுமான பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் தந்தை, மகன் இருவருமே அதிமுகவில் நெருக்கமாக இருந்த நபர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வருமானவரித்துறை கைப்பற்றிய அந்த ஆவணத்தை கொடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வருமான வரித்துறையிடம் இருந்து தற்போது வாங்கியுள்ளனர்.
அவற்றை வைத்து கடந்த 2 நாட்களாக தொழிலதிபர் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த ஆவணம் கண்டெடுக்கப்பட்ட சென்னை சிஐடி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளருக்கும், செந்தில்குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், சிஐடி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நாகி ரெட்டி மற்றும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் சர்வீஸ் அபார்ட்மெண்ட் நடத்தி வரும், ஆண்டனி வெல்டிங்டன் ஆகிய இருவரையும் வரவழைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
வருமானவரித்துறை சோதனையின்போது, இந்த அடுக்குமாடி குடியிருப்பு 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் ஆவணங்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடுகளை யார் வாடகைக்கு எடுத்தது? ஆவணங்களை வைத்திருந்த நபர்கள் யார்? இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் விசாரணை வளையத்தில் உள்ள தொழிலதிபர் செந்தில்குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம்