சென்னை: விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவரான சுருதி திலக் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது மாமியாரான ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அலுவலர் திலகவதி, அவரது மகன் பிரபு மீது புகார் ஒன்றை அளித்தார்.
அவர் அளித்துள்ள புகாரில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் திலகவதியின் மகனான பிரபு திலக்குடன் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு மகன், மகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொடுமைப்படுத்துதல்
தனது கணவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதால் அதைப் பற்றி கேட்டதற்கு தனது கணவர், மாமியார் இணைந்து தன்னை கொடுமைப்படுத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2016ஆம் ஆண்டு, தனது கணவர் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்திவந்தபோது காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும், மாமியார் திலகவதி தனது பதவியைப் பயன்படுத்தி வெளியே கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து தனது கணவர் அவரது பெற்றோருடன் இணைந்து அடித்து துன்புறுத்துவதாகவும், இதனால் பிள்ளைகள் மன ரீதியாகப் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல்
இதனால் தனது பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும், தனக்கும் தனது பிள்ளைகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Job Scam: வேலைவாய்ப்பு மோசடி- 68 பேர் கைது