சென்னை: அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ஆரோக்கிய பவன் என்ற உணவகம் செயல்பட்டுவருகிறது. நேற்று முன்தினம் (அக். 01) இரவு அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி 5 நிமிடம் கூடுதலாக வாடிக்கையாளர்கள் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த வெற்றிவேலன், ஏழுமலை என்ற இரண்டு காவலர்கள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று, உணவக காசாளர் ஆறுமுகம் என்பவரை எச்சரித்து சென்றுள்ளனர். அதற்கு, வாடிக்கையாளர்கள் சாப்பிட்டவுடன் உடனடியாக உணவகத்தை மூடிவிடுவதாக ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உணவகத்தை மூடுவதற்கான ஆயத்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். மீண்டும் அங்கு வந்த காவலர்கள், பிரைட் ரைஸ் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பிரைட் ரைஸ் இல்லை எனச் சொன்னதால் காவலர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவலர்கள் போதையில் இருப்பது காசாளர் ஆறுமுகத்திற்கு தெரியவந்துள்ளது.
தொடர்ந்து காவலர்கள், ஆறுமுகத்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவரின் பிறப்புறுப்பில் காவலர்கள் தாக்கியதால், ஆறுமுகம் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள வியாபாரிகள் காவலர்களைத் தடுக்க முயன்றுள்ளனர்.