சென்னை: அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜெய் சங்கர் (54). இவர் திமுக 100ஆவது வட்டச் செயலாளராக இருந்துவருவதுடன் பிளாஸ்டிக் வியாபாரமும் செய்துவருகிறார்.
இந்நிலையில், வட்டச் செயலாளர் ஜெய் சங்கர் நேற்று இரவு 9 மணியளவில் கட்சி ரீதியிலான அலுவல் பணிகளை முடித்து அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மூன்று பேர் ஜெய்சங்கரின் அலுவலகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்திலிருந்த கருணாநிதி சிலையை உடைத்ததுடன், கோப்புகளைக் கிழித்து எறிந்து சூறையாடினர்.
திமுக வட்டச் செயலாளர் அலுவலகத்தில் பணம் திருட்டு மேலும், அருகில் இருந்த மாவுக் கடை, பிரியாணி கடையிலும் பணம், உணவு கேட்டு ரகளையில் ஈடுபட்டு பொருள்களைச் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சுமார் 10 மணியளவில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய் சங்கர் தனது அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பதையும், அலுவலக மேசை டிராயரில் வைத்திருந்த மூவாயிரம் ரூபாய் திருடுபோயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் ஜெய் சங்கர் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு திமுக வட்டச் செயலாளர் அலுவலகம் உள்பட மூன்று கடைகளை சூறையாடிய ஐய்யப்பாக்கத்தைச் சேர்ந்த மணி, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய இரண்டு பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ராஜேஷ் (எ) நெருப்பு ராஜேஷை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இதே இடத்தில் கட்சி அலுவலகம் நடத்திவருவதாகவும், தங்களது கட்சிப் பணிகளைத் தளர்வுபடுத்தவே அதிமுகவினர் இதுபோன்ற கும்பல்களை ஏவி அசம்பாவிதங்களை ஏற்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் தங்களுக்கு உள்ளதாகவும், இது குறித்து காவல் துறையிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாகவும் திமுக வட்டச் செயலாளர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் விசாரணை